வினுப்பிரியா தற்கொலை வழக்கில் தலைமைக் காவலர் சுரேஷ்குமார் இடைநீக்கம்


சேலத்தை அடுத்த இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த வினுப்பிரியா தற்கொலை வழக்கு விவகாரத்தில் தலைமைக் காவலர் சுரேஷ்குமார் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் சேலம் மாவட்ட காவல்துறை ஆணையர் சுனித்சரண்.
சேலத்தை அடுத்த இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் அண்ணாதுரையின் மகள் வினுப்ரியா (21). முகநூலில் அவரது படம் ஆபாசமாக வெளியிடப்பட்டது தொடர்பாக வினுப்ரியாவும், அவரது பெற்றோரும் மாவட்ட காவல் துறையிடம் புகார் செய்தனர். அதன் பேரில், சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். ஆனால், போலீஸார், வினுப்ரியா மீதே சந்தேகம் தெரிவித்தும், அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் விசாரணையை நடத்தியதாகத் தெரிகிறது. போலீஸார், வினுப்ரியாவின் தந்தை அண்ணாதுரையிடம் புதிய செல்லிடப்பேசியை வாங்கித் தரும்படி நிர்பந்தம் செய்ததையடுத்து, அண்ணாதுரை ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசி ஒன்றை போலீஸாருக்கு வாங்கிக் கொடுத்தாராம். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வினுப்ரியாவின் முகநூலில் மீண்டும் ஓர் ஆபாச படம் வெளியிடப்பட்டதால், மிகுந்த மனவேதனை அடைந்த அவர் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக வினுப்ரியாவின் தந்தை கூறுகையில், புகார் கொடுத்த பின்னர் வழக்குப் பதிவு செய்யாமலும், விசாரணையை முறையாக மேற்கொள்ளாமலும், முகநூல் பக்கத்தை முடக்காமலும் காலம் தாழ்த்தியதால்தான் வினுப்ரியா தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு போலீஸார்தான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.
காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது விசாரணை மேற்கொள்ளாமல் தங்களை போலீஸார் அலைக்கழித்தனர். முகநூல் பக்கத்தை முடக்குவதற்கு 20 நாள்கள் ஆகும் என்று தெரிவித்தனர். ஆனால், உறவினர் மூலம் முகநூல் பக்கத்தை சில மணி நேரத்தில் முடக்கினோம். இதுபோன்ற நிலை வேறு யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது. இந்த வழக்கில் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித்குமார் சிங் நேரில் சென்று சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். காவலர்களின் பொறுப்பற்ற செயலுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்புக் கோரினார்.
இந்நிலையில், சைபர் க்ரைம் பிரிவைச் சேர்ந்த தலைமைக் காவலர் சுரேஷ்குமாரா இடைநீக்கம் செய்து சேலம் மாவட்ட காவல்துறை ஆணையர் சுனித்சரண் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் இன்று காலை சேலம் கல்பாரப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த செல்போன் மற்றும் சிம்கார்டை பறிமுதல் செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்


EmoticonEmoticon