பெண் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கில் வாலிபரின் தெளிவான புகைப்படம் கிடைத்தது



சென்னை: சூளைமேட்டை சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் மகள் சுவாதி (24). செங்கல்பட்டு அருகே உள்ள பரனூரில் இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளாராக பணியாற்றி வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர், சுவாதியை வெட்டி கொலை செய்தார். கொலையாளியை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் முதல் கட்டமாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வெளியே தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில், வாலிபர் ஒருவர் காலை 6.30 மணிக்கு செல்வதும் 6.40க்கு வெளியே செல்வதும் தெரிந்தது. மேலும், அவர் வேக வேகமாக நடப்பதும், சுவர் மீது ஏறி ஓடுவதுமாக இருந்தார். எனவே, இவர்தான் கொலையாளியாக இருப்பார் என்ற கோணத்திலேயே விசாரணை வளையம் அமைக்கப்பட்டது.

அந்த நபர், கொலையாளி இல்லை என்றால், தற்போது, அவர் போலீசாரின் விசாரணைக்காக நேரடியாக வந்திருப்பார். ஆனால், அவர் வராத காரணத்தால் அவர்தான் கொலையாளி என்று போலீசார் அடித்து சொல்கின்றனர். அவர் கொலையாளி என்றால் காரணம் என்ன? என்பதில்தான் சிக்கல் உள்ளது. மேலும், வாலிபரின் உருவம் துல்லியமாகவும் இல்லை. இதைத் ெதாடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். 
மேலும் சுவாதியின் பேஸ்புக் பக்கம் மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இணைந்திருந்த 100க்கும் மேற்பட்டவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் தற்போது 2 வாலிபர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில், ஒருவரின் உருவம் வீடியோ காட்சியில் வருவதுபோல் உள்ளதாக போலீசார் கருதுகின்றனர். சுவாதியின் 3 தோழிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

சுவாதியின் பெற்றோருக்கு கொலைக்கான காரணம் தெரியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால், இந்த நேரத்தில் போலீசாரின் கேள்விகளை அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை.  எனவே, வீடியோவில் வந்த காட்சிகளை ஆராய்ந்து அந்த உருவத்தை துல்லியமாக தற்போது தயாரித்துள்ளனர். அந்த புகைப்படத்தை அனைத்து ஊடகம் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு கொடுக்க உள்ளனர். மேலும், லோக்கல் தொலைக்காட்சி சேனல் மற்றும் பத்திரிகைகளுக்கும் அனுப்ப உள்ளனர். மேலும், சுவாதி அடிக்கடி செல்லும் இடம் மற்றும் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள நடைபாதை கடை வியாபாரிகள் அனைவரிடமும் தனிப்படை போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.


EmoticonEmoticon